/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/பஸ் வசதியின்றி ஐந்து கிராம மக்கள் அவதிபஸ் வசதியின்றி ஐந்து கிராம மக்கள் அவதி
பஸ் வசதியின்றி ஐந்து கிராம மக்கள் அவதி
பஸ் வசதியின்றி ஐந்து கிராம மக்கள் அவதி
பஸ் வசதியின்றி ஐந்து கிராம மக்கள் அவதி
ADDED : மே 26, 2010 01:17 AM
மதுராந்தகம் : மதுராந்தகம் அருகே போதிய பஸ் வசதி இல்லாமல், ஐந்து கிராம மக்கள் அவதிப்படுகின்றனர்.
மதுராந்தகத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கூடலூர் கிராமம். இதன் அருகே சிந்தாமணி, ஊனமலை, மாத்தூர், அகிலி மாத்தூர் ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன. இக்கிராமங்கள் அனைத்தும் மதுராந்தகம் அடுத்த மொறப்பாக்கம் - எலப்பாக்கம் இடையே அமைந்துள்ளன. இக்கிராமங்களில் இரண்டாயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமங்களுக்கு மதுராந்தகத்திலிருந்து அரசு டவுன் பஸ் தடம் எண் 13 டி இயக்கப்படுகிறது. இப்பஸ் தினமும் காலை 9 மணிக்கு எலப்பாக்கத்திலிருந்து புறப்பட்டு கூடலூர் உட்பட ஐந்து கிராமங்கள் வழியாக மதுராந்தகம் செல்கிறது. பகல் ஒரு மணிக்கு மதுராந்தகத்திலிருந்து எலப்பாக்கம் செல்கிறது. அதன்பின் எலப்பாக்கத்திலிருந்து மாற்றுப்பாதை வழியாக மதுராந்தகம் செல்கிறது. இரவு 8 மணிக்கு மதுராந்தகத்திலிருந்து எலப்பாக்கம் செல்கிறது. இப்பஸ் தினமும் மூன்று முறை மட்டுமே கூடலூர், சிந்தாமணி, ஊனமலை, மாத்தூர், அகிலி மாத்தூர் கிராமங்களுக்கு வந்து செல்கிறது. மற்ற நேரங்களில் இக்கிராம மக்கள் பஸ் வசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர். இக்கிராமங்களிலிருந்து சென்னை உட்பட வெளியூர்களில் வேலை செய்ய செல்பவர்கள் குறித்த நேரத்திற்கு செல்லவோ, திரும்பி வரவோ முடிவதில்லை.
இக்கிராமங்களில் மருத்துவ சுகாதார மையம் இல்லாததால் இரவு அவசரத்திற்கு மதுராந்தகத்தில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. போதிய பஸ் வசதி இல்லாததால், மாணவ, மாணவியர் எட்டு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று மொறப்பாக்கம் பள்ளியில் படிக்கின்றனர்.
சாலைகளும் பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றன. இக்கிராம மக்களின் நலன் கருதி சாலைகளை சீரமைத்து போதிய பஸ்களை இயக்கவும், ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கவும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.